வீரன் சுந்தரலிங்கம் நினைவு கிராமத் திறப்புவிழா
பகுதி 2 · 2 / 2
வெள்ளையருடைய ஆதிக்கம் மெல்ல மெல்ல பரவி கட்டபொம்மனுடைய வீரத்தையும் அவருடைய கோட்டையையும் அவர் குறிப்பிட்டதைப் போல இந்தப் பகுதி மக்களையும் சுற்றி வளைத்துக் கொண்டு அந்தக் கோட்டையையே கைப்பற்றுவது என்கிற முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களை வெள்ளைக்கார துரைமார்கள் செய்து கொண்டிருந்த நேரத்தில் கட்டபொம்மனிடத்திலே இல்லாத ஆயுதங்கள் பீரங்கிகள் இவைகளையெல்லாம் பெற்றிருந்த வெள்ளைக்காரர்கள் கட்டபொம்மனுடைய கோட்டையைச் சுற்றிவளைத்து அதைப் பிடிப்பது என்ற இறுதியான முடிவுக்கு வந்த காலகட்டத்தில் அன்றைக்கு வெள்ளையத் தேவன் ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருக்க இப்படி வெள்ளைக்காரர்கள் கோட்டையை முற்றுகையிட்டு அதைத் தாள்தாளாகப் பிளக்கப் போகிறார்கள் என்ற செய்தி சுந்தரலிங்கத்தின் காதில் விழுகிறது.
சுந்தரலிங்கத்திற்கு ஒரு முறைப்பெண்; வடிவு என்று அந்தப் பெண்ணுக்கு பெயர். இருவரும் எப்படி வெள்ளைக்காரர்களுடைய சூழ்ச்சியை முறியடிப்பது என்று திட்டமிட்டார்கள். இரண்டு பேருமே ஆடு மேய்ப்பவர்களைப் போல வேடம் போட்டுக் கொண்டு வெள்ளைக்காரர்கள் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்துகளைக் கொண்டுதான் கட்டபொம்மன் கோட்டையை தகர்ப்பது என்று அன்றைக்கு அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள், அந்த வெடிமருந்துகளையே பயனற்றதாக செய்து விட்டால் கோட்டை தப்பும் அல்லவா என்று எண்ணிய சுந்தரலிங்கத்தினுடைய முறைப்பெண் வடிவும் சுந்தரலிங்கமும் திட்டமிட்டு இருவரும் அந்த வெடி மருந்துச் சாலைக்குள்ளேயே தீப்பந்தத்தை கட்டிக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த வெடிமருந்துகளை எல்லாம் வெடிக்கச் செய்து அழித்து முடித்து தாங்களும்
அந்த வெடிமருந்துக்குள்ளே வெடிமருந்தாக மாறி மறைந்தார்கள். தியாகப் பிழம்புகளாக ஆனார்கள் சுந்தரலிங்கமும் வடிவு என்கிற அந்த முறைப்பெண்ணும். இப்படித் தங்களையே, வெடிமருந்துத் தீக்கு இரையாக்கிக் கொண்டு அன்றைக்கே - இன்றைக்குச் சொல்வார்கள் தற்கொலைப்படை தற்கொலைப்படை என்று - அன்றைக்கே வெள்ளையர்களை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையில் தற்கொலைப் படையின் தளநாயகனாக விளங்கியவன் சுந்தரலிங்கம் என்பதை எண்ணுகிற நேரத்தில் நாம் பெருமை அடைகிறோம்.
ஆனால் இந்தத் தற்கொலைப் படை எல்லாம்; இந்த வீரதீரச் செயல்கள் எல்லாம் அன்றைக்குத் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர் பீரங்கியோடு வந்த நேரத்திலே, அவன் படை எடுத்து வந்த நேரத்தில் எதிர்க்க இவைகள் எல்லாம் தேவைப்பட்டன. ஆனால் கால மாற்றத்தால் வெள்ளைக்காரனை எதிர்க்க உத்தமர் காந்தியடிகள் அகிம்சையையே தன் ஆயுதமாகக் கொண்டார். அகிம்சையையே தன் ஆயுதமாகக் கொண்டு குமரி முதல் இமயக் கோட்டம் வரையுள்ள இந்திய நாட்டின் மக்களையும் திரட்டி அவருடைய தலைமையிலே நடைபெற்ற அந்தச் சுதந்திரப் போராட்டத்தின் காரணமாகத்தான் வெள்ளையர்கள் வெளியேறினார்கள்.
வெள்ளையர்கள் வெளியேறினாலும் கூட நாடு சுதந்திரம் பெற்றாலும் கூட மண்ணுக்குத்தான் சுதந்திரம் கிடைத்ததே தவிர மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. அதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். அந்தச் சுதந்திரத்தைப் பெறத்தான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள். இன்றைக்கும் அவர்கள் வழிநின்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
அப்படிப் பாடுபடுகின்ற நேரத்தில் இங்கே இன்றைக்குக் கட்டப்பட்டு இருக்கின்ற 200 வீடுகளை யாரும் பெரிதாக எண்ணிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் இன்றைக்குத் தமிழகத்திலே இதே போன்ற வீடுகள் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும், எந்தத் தொகுதிக்குச் சென்றாலும் 200, 300 வீடுகள் இருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் நான் பெருமிதத்தோடு சொல்லவில்லை - பெருமையோடு சொல்லவில்லை. இங்கே அமைச்சர் கோ.சி. மணி அவர்கள் குறிப்பிட்டது போல ஆதிதிராவிட பெருங்குடி மக்களுக்கு இலவசமாக காங்கிரீட் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்ற திட்டத்தை முதன் முதலாக உருவாக்கியது - இந்தியாவிலேயே முதன் முதலாக நிறைவேற்றிக் காட்டியது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிற கருணாநிதிதான் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.
ஒருமுறை இப்படிப்பட்ட வீடுகள் திறப்பு விழாவில் அம்மையார் சத்தியவாணிமுத்து அவர்கள் அரிசனத் துறை அமைச்சராக அன்று இருந்தார்கள். அப்போது எல்லாம் அந்தத் துறைக்கு அரிசன நலத்துறை என்று பெயர் - அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தார்கள். இதுபோன்ற 100 வீடுகளை ஓர் இடத்திலேயே கட்டி முடித்து அதைத் திறந்துவைக்கும்பொழுது அவர் குறிப்பிட்டார். அவர்களும் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். இருந்தாலும் ஆதங்கத்தோடு சொன்னார்கள்; “நீங்கள் இந்த வீடுகளை எல்லாம் கட்டினீர்கள்.
எங்களுடைய மக்கள் நன்றியோடு இருப்பார்களா?” என்று கேட்டார்.
அப்பொழுது நான் பேசும்பொழுது சொன்னேன்: “அம்மா, நான் பெரியாருடைய தொண்டன்; பெரியாருடைய பொன்மொழி என்ன தெரியுமா? நன்றியை எதிர்
பார்த்துக் கடமையைச் செய்யாதே. நன்றி வருகிறதோ இல்லையோ - நன்றி காட்டுகிறார்களோ இல்லையோ உன்னுடைய கடமையைச் செய்து கொண்டு இரு. இதுதான் பெரியாருடைய பொன்மொழி. எனவே எனது கடமையைச் செய்கிறேன். நீங்கள் சொல்வார்களா என்று கேட்டார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சில இடங்களில் நான் கட்டித் தந்த வீடுகளில் ‘கருணாநிதி வாழ்க’ என்று எழுதுகிறார்கள்.
சில வீடுகளின் சுவர்களில் ‘கருணாநிதி ஒழிக’ என்றும் எழுதுகிறார்கள் என்று சொன்னார்கள். பரவாயில்லை, ஒழிக என்று எழுதினாலும், வாழ்க என்று எழுதினாலும், என்னுடைய பெயரை மறக்காமல் கருணாநிதி என்று எழுதுகிறார்களே அதுபோதும் எனக்கு” என்று நான் சொன்னேன்.
எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களானாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களானாலும், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் இன்றைக்கு அடித்தளத்தில் இருக்கின்ற மக்களானாலும் அவர்கள் இன்னும் பல செய்திகளைப் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருளில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒளி ஏற்ற வேண்டும். அவர்களுடைய உள்ளத்திற்கு எல்லாம் வெளிச்சம் தர வேண்டும். நாம் யார் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.
அப்படி உருவாக்கும்பொழுது எல்லாம் ஒரே குலம்; எல்லோரும் ஓரின மக்கள் என்ற உணர்வை நாம் ஏற்படுத்தி ஆக வேண்டும். அவர்கள் ஆதிக்க சமுதாயம் என்று நம்மால் அடையாளம் காட்டப்பட்டாலும் அல்லது அடித்தளத்து மக்கள் என்று நம்மால் அடையாளம் காட்டப்பட்டாலும் இருசாராரும், இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து ஒன்றாக தோள் மீது தோள் கைபோட்டுக் கொண்டு தோழர்களாக, சகோதரர்களாக வாழ வேண்டும்.
இந்தச் சரித்திரம் என்ன சொல்கிறது. சுந்தரலிங்கத்தினுடைய வரலாறு என்ன சொல்கிறது. வெள்ளையத் தேவனும் சுந்தரலிங்கமும் ஒரே படையில் கைகுலுக்கிக் கொண்டு ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுக் கொண்டு படை நடத்திய பெரும் வீரர்கள். ஏன் இன்றைக்கு அந்த நிலை மாறி இருக்கிறது? மாறிய நிலையை வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துச் செல்லி மீண்டும் அந்தப் பழைய நிலையை கொண்டு வர வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர வேறல்ல.
குறிப்பாக, பழைய வீரர்களை, பழைய கால தியாகிகளை நினைவுபடுத்துவது நம்முடைய மிகப்பெரும் பொறுப்பாகும். இங்கு கிருஷ்ணசாமி பேசும்பொழுது சொன்னார்: “சுதந்திரம் பெற்ற 50 ஆண்டு காலத்தில் இவர்களையெல்லாம் யாராவது நினைத்தார்களா?” என்றார். நினைத்தார்களா என்று கேட்டவர், “இவர் ஒருவர்தான் நினைத்து இருக்கிறார்” என்று என்னைச் சுட்டிக்காட்டுவார் என்று எண்ணினேன்.
சொல்லாமலே நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்பதற்காக சுட்டிக் காட்டாமல் விட்டு விட்டார் என்று நான் புரிந்து கொள்கிறேன்.
ஏனென்றால் நான் ஒரு காலத்திலே அவருக்குத் தலைவராக இருந்தவன்தான். அவரைப் பல முறை தம்பி என்று அழைத்திருக்கின்றேன். இன்றைக்கும் அழைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். தலைவராக இருந்தபொழுதுதான் அவர் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியிலே தி.மு.க. வேட்பாளராக நின்றார். அவருக்காகப் பல கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்த அந்த வாய்ப்பையும் பெற்றவன் நான். எனவே இங்கே சீற்றத்தோடு பேசினார் என்றால், ஒரு புயல் போல உறுமினார் என்றால், ஒரு சிங்கம் போல கர்ஜித்தார் என்றால், நான்
எண்ணிக் கொள்கிறேன். இதற்கு எல்லாம் காரணம், அடித்தளம், தி.மு. கழகத்திலே அவர் இருந்ததினால் அல்லவா என்று எண்ணி நான் பெருமை அடைகின்றேன். மகன் போர்க்களத்திலே புகழ் பெறுகிற நேரத்தில்தான் தாய் தன்னுடைய வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொள்வதைப் போல நான் தடவிப் பார்த்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற்றோமே என்கிற அளவிலே மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியிலே உங்களோடு நானும் பங்கு கொள்கிறேன்.
18-4-98 அன்று வீரன் சுந்தரலிங்கம் நினைவு கிராமத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை
