வீரன் சுந்தரலிங்கம் நினைவு கிராமத் திறப்புவிழா
பகுதி 1 · 1 / 2
வீரன் சுந்தரலிங்கம் நினைவு கிராமத் திறப்புவிழா
இதயத்திற்கு இதம் தருகின்ற விழா ஒன்று மிகுந்த சீரும் சிறப்போடும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வட்டாரத்தில் 1972-க்குப் பிறகு மணலி கந்தசாமி அவர்களோடும், சுப்பு அவர்களோடும் வந்து வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை நடத்தி, அன்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று வீரபாண்டிய கட்டபொம்மனுடைய இழந்து அழிந்து மண்மூடிப் போன பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் புதுப்பிப்பேன் என்று உறுதி அளித்து அந்த உறுதியை நிறைவேற்றுகின்ற வகையிலே கோட்டை கொத்தளத்தை அமைத்து வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அன்றைக்குத் தோளோடு தோள் நின்று துணை புரிந்து விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்ட தளபதிகளுக்கெல்லாம் நினைவுச் சின்னங்கள் அமைத்து அப்படி அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலே ஒன்றாக வீரன் சுந்தரலிங்கத்தின் தோரணவாயிலை அப்பொழுதே அமைத்தவன் நான் என்கிற முறையில் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கே நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் முன்னிலை ஏற்றுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சுந்தரலிங்கத்தை நான் எப்பொழுதெல்லாம் நினைவு
படுத்தியிருக்கிறேன் என்பதை எடுத்துச் சொன்னார். நான் எழுதிய நூலிலிருந்து அவர் அதை எடுத்து குறித்து கொண்டு வந்திருக்கிறாரோ, அதையேதான் நானும் குறித்து கொண்டு வந்திருக்கிறேன். இதிலிருந்தே எங்களுக்குள்ள ஒற்றுமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் 14 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் நின்றவர் என்பதை ஞாபகப்படுத்தினால் இந்தக் கருத்து ஒற்றுமை எப்படி வந்தது என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு 15 ஆண்டுக்கு முன்பு நான் ‘குங்குமம்’ இதழில் ‘பாயும்புலி பண்டாரக வன்னியன்’ என்ற ஒரு தொடரோவியத்தைத் தீட்டினேன். அந்த தொடரோவியத்தினுடைய முதல் அத்தியாயமே வீரன் சுந்தரலிங்கத்தை அறிமுகப்படுத்துகின்ற அத்தியாயமாகத்தான் அமைந்திருக்கிறது. உங்களில் பலபேர் அதைப் படித்திருக்க முடியாது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே நினைவு ஊட்டியவன் நான் என்ற முறையில் இதை இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.
அதைத்தான் இங்கே கிருஷ்ணசாமியும் உங்களுக்கு நினைவுபடுத்தினார். அதிலே குறிப்பிட்டிருக்கின்றேன். அதை கிருஷ்ணசாமி படிக்கும்போது நீங்கள் சற்று அமைதியில்லாமல் ஆனந்த பரவசத்தில் உங்களையும் மறந்து உணர்ச்சி வசப்பட்டு முழக்கம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் நான் என்ன எழுதினேன், அவர் என்ன படித்தார் என்பதை உங்களில் பல பேர் காது கொடுத்து கேட்கவில்லை. எனவே நானே அதை படிக்கிறேன்:
“வீரபாண்டிய கட்டபொம்மனின் அன்புக்குரிய தளபதி வெள்ளையத் தேவனுக்கு உற்ற நண்பனும் அவனையொத்த வீரனுமான சுந்தரலிங்கம் பாஞ்சாலங்
குறிச்சி படைமுகத்துச் சிங்கங்களிலே ஒருவன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்து இந்தத் தமிழ் மண்ணை அந்நியர் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காக தடந்தோள் தட்டிய பெருவீரன் சுந்தரலிங்கம்.”
இது பாயும்புலி பண்டாரக வன்னியன் புத்தகத்தில் 13-ஆவது பக்கத்திலே இடம் பெற்றிருக்கிறது.
மேலும் சொல்லுகின்றேன், “தேவர் குலத்தில் உதித்த வெள்ளையத்தேவனும், தேவேந்திர குலத்தில் உதித்த இந்தச் சுந்தரலிங்க குடும்பனும் கூடப் பிறக்காத குறையொன்றே தவிர இருவரும் இணைபிரியாத சகோதரர்கள்.”
இதையும் 36-ஆவது பக்கத்திலே பாயும்புலி பண்டாரக வன்னியன் புத்தகத்திலே குறிப்பிட்டிருக்கின்றேன்.
மேலும் “பாண்டிய மண்ணின் உரிமைக்காக வீரப் போரிட்ட வெட்டும் பெருமாளின் பரம்பரையில் வந்தவர் இந்தச் சுந்தரலிங்கக் குடும்பன்” என்பதையும் அந்த நூலின் 17-ஆவது பக்கத்திலே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
200 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் தளநாயகனாக, முன்னோடியாக விளங்கிய வீரன் சுந்தரலிங்கம். அவருடைய சொந்த ஊரை “தென்னகத்தினுடைய ஜிப்ரால்டர்” என்று வெள்ளையர்கள் வர்ணித்தார்கள்.
அத்தகைய பெருமைக்குரியவர்களில் ஒருவர் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஒற்றர் படைத் தளபதியாக அவர் பணியாற்றினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
அந்தக் காலத்தில் அரசு கெஜட்டில் இந்த ஊரின் பெயர் ‘கெவுணகிரி’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எப்படி கெவுணகிரியாக மாறிற்று? என்பதை நான்
ஆச்சரியத்தோடு பார்க்கவில்லை. இப்படி பல பெயர்கள் மொழி மாற்றம் - பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. வெள்ளைக்கார கவர்னர் வந்து அடிக்கடி தங்குகிற காரணத்தால் இது போகப் போக சில ஆண்டுகளுக்குப் பிறகு கவர்னகிரி என்று ஆகி பிறகு பேச்சு வழக்கில் கெவுணகிரி என்று ஆயிற்று. வேறொரு உதாரணம் கூறுகிறேன். சென்னை மாநகரத்தில் ஒரு வெள்ளைக்காரருடைய பெயரால் மவுண்ட் பகுதியில் ஒரு பாலம்; அந்தப் பாலத்திற்கு வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் ஹேமில்டன் பிரிட்ஜ் என்று பெயர் இருந்தது.
அந்த பிரிட்ஜின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து தேய்ந்து கடைசியாக ‘அம்பட்டன்’ பிரிட்ஜ் - (மன்னிக்க வேண்டும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்) என்றாகி விட்டது. அந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்ற கொடுமையைச் சொல்வதற்காக சொல்கின்றேன். அம்பட்டன் பிரிட்ஜ் என்றாகி அதற்கு சரியான மொழிபெயர்ப்பாக அதை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து பார்பர் பிரிட்ஜ் என்றே ஆக்கி விட்டார்கள்.
ஹேமில்டன் என்ற வெள்ளைக்காரத் துரையின் பெயர் கடைசியாக பார்பர் பிரிட்ஜ் என்கிற அளவுக்கு மாறிற்று. அதேபோல்தான் கவர்னர் அடிக்கடி தங்கிய காரணத்தினால் இது கவர்னகிரியாக இருந்து காலப் போக்கில் கெவுணகிரியாக ஆயிற்று. இந்த கவர்னகிரியை சார்ந்த கட்டகருப்பன் - முத்து தம்பதியரின் மகன்தான் சுந்தரலிங்கம். இளம் வயதிலேயே வீரத்தின் விளைநிலமாய் எடுத்த காரியத்தை முடிக்கின்ற ஆற்றல் வாய்ந்தவனாய் விளங்கிய காரணத்தினால் கட்டபொம்மன் சுந்தரலிங்கத்தை தன்னுடைய ஒற்றர்படைத் தளபதியாகவே நியமித்துக் கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.
