யாதும் ஊரே யாவரும் கேளிர்!
பகுதி 2 · 2 / 2
அப்போது ஒருநாள், கிராமங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்து, அதன்மூலம் தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிற ஒருவன், என் கிராமத்திலே வந்து, இருக்கிற பெரியவர்களையும், வாலிபர்களையும் பார்த்துப் புகைப்படம் எடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சிலர் ஒத்துக் கொண்டார்கள். பலர் மறுத்தார்கள். அப்படி மறுத்தவர்களிலே என் தந்தையும் ஒருவர்.
ஏனென்றால், அன்றைக்கு ஒரு நம்பிக்கை இருந்தது; ‘போட்டோ’ எடுத்துக் கொண்டால் - நம் ஆவியிலே பாதி அந்த காமிராவுக்குள்ளே நுழைந்து அந்தப் படத்திலே பதிந்து விடுகிறது! ஆகவே புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர்களுடைய ஆயுள் குறைந்து விடும் என்பதே அந்த நம்பிக்கை. பிறகு என் தகப்பனாரை வற்புறுத்தி உட்கார வைத்து கட்டாயப்படுத்திப் புகைப்படம் எடுத்தோம்; அதற்குப் பிறகும் பல ஆண்டுக் காலம் அவர் உயிருடன் இருந்தார்.
ஆகவே புதுமையைச் சொல்கிற நேரத்தில் பயப்படுகிற தன்மையிலிருந்து இன்னும் மனிதன் தன்னை மீட்டுக் கொள்ளவில்லை!
அதற்கு அடையாளமாகத்தான் ஆரம்பத்திலே இந்தப் பகுதி மக்கள்கூட இந்த நகரின் உதயம் தங்களைப் பாதிக்குமோ என்கிற சந்தேகத்தோடு பார்த்தார்கள்.
ஆனால் இன்றைய தினம் அந்த மக்களிலே பெரும்பாலானவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்ற காட்சியை நான் காண்கிறேன்.
இதனுடைய நிர்வாகிகள், மற்றும் இங்கு பணியாற்றுகின்ற வெளிநாட்டுக்காரர்கள் அத்தனை பேரும் இங்கே இருக்கின்ற கிராமத்து மக்கள் எந்த அளவுக்குத் தங்களோடு ஒத்துழைக்கிறார்கள் என்பதை எங்களிடத்திலே பெருமையோடு சொன்னார்கள்.
நாவலர் குறிப்பிட்டதைப் போல நாமெல்லாம் எப்படி உறவாக - ஒன்றாக இரண்டறக் கலந்து விட்டோம் என்பதற்கான அடையாளத்தைக் காலையிலே இங்கே வந்ததுமே கண்டோம்.
வெளிநாட்டு வெள்ளைக்காரர் ஒருவர் எங்களைப் போல வேட்டி அணிந்து கொண்டு சட்டை போட்டுக் கொண்டு ‘வாருங்கள்; வணக்கம்!’ என்று அழைத்தார்.
அழைத்தது மாத்திரமல்ல; அவர் ஆங்கிலத்திலே சில விவரங்களைக் கூறிக் கொண்டு வந்து இடையிலே தமிழில் பேசினார்.
அங்கிருந்த மாடு கன்றுகளை எல்லாம் காட்டி, “இது நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டார். நன்றாக இருக்கிறதா என்று அவ்வளவு இலக்கணமாகக் கேட்கவில்லை. ‘நல்லா இருக்கா?’ என்று கேட்டார்.
அவரது தமிழை நாங்கள் சுவைக்க ஆரம்பித்ததும் ‘கண்ணுக்குட்டி பாக்க வாரீயா?’ என்று கேட்டார்.
ஆக இங்கு பேசப்படுகிற மக்களிடத்தில் பழக்கத்தில் இருக்கின்ற தமிழை வெள்ளைக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் இன்று கற்றுக் கொள்கிறார்கள்.
ஆகவே ஒரு இணைப்பு - அதாவது ஒரு சங்கமம் - மாநிலத்துக்கு மாநிலம் அல்ல - நாட்டுக்கு நாடு - உலகத்திலே இருக்கிற பல்வேறு நாடுகளுக்கு இடையே இங்கே உருவாகிறது.
அந்த இணைப்புக்கு ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகின்ற தமிழ்நாடு அரங்க விழாவில் இன்று நாங்கள் பங்கேற்கிறோம்.
நாங்கள் உலக அளவிலே கூட இணைப்பை விரும்புகிறவர்கள் - இணையாக இருக்கின்ற தன்மையை எந்த நேரத்திலும் நாங்கள் விரும்பாதவர்கள். நாங்கள் என்றைக்கும் உலக அரங்கத்தில் இணைப்பு விரும்புகிறவர்கள்.
அறிக்கை படிக்கிற நேரத்தில் ‘பன்மையில் ஒருமை’ ‘ஒருமையில் பன்மை’ என்ற தொடரை அடிக்கடி சொன்னார்கள்.
ஒருமையிலே பன்மை என்ற அந்த வார்த்தையைச் சொன்னால் - இங்கே 19 அரங்குகள் இந்தியப் பேரரங்கு என்கிற பெயரில் - பாரத் நிவாஸ் என்ற பெயரில் கட்டப்பட இருக்கின்றன.
பத்தொன்பதையும் ஒன்றாகச் சேர்த்து பாரத் நிவாஸ் என்று இங்கே கட்டவில்லை.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அரங்கு என்று தனித் தனியாகக் கட்டி; முடிவாக பாரத் நிவாஸ்
என்று - இந்தியப் பேரரங்கம் என்று - பெயர் வைக்கிறார்கள்.
அதைப் போல ஒவ்வொரு அரங்கத்திலும் அந்தந்த மாநிலத்தில் தனித் தன்மைகள் இருக்கும் என்றும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
ஆகவே இப்படிப்பட்ட இணைப்பைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அந்த இணைப்பை - அந்தச் சங்கமத்தை - நாம் காணுகிற நேரத்தில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு அரங்கத்திற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது என்று சொன்னார்கள்.
அத்தோடு மிச்சமுள்ள ஒன்பது லட்சத்தையும் உடனடியாகக் கொடுத்துவிடும்படி என்னையும் நாவலரையும் பார்த்து இங்கே கேட்டுக் கொள்ளவும் செய்தார்கள்.
அவர்கள் கேட்டபடி பணத்தை மட்டுமல்ல; ஒத்துழைப்பையும் தர இருக்கிறோம் நாங்கள்.
இந்த ஆரோவில் நகரம் நல்ல முறையிலே வளர்வதைத் தமிழ்நாடு அரசு தனக்குற்ற ஒரு இலட்சியமாகக் கொண்டு, ஒத்துழைப்பை எந்த அளவுக்குத் தரமுடியுமோ அந்த அளவுக்குத் தரும்.
1973-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் ஆரோவில் சர்வதேச நகரில் தமிழக அரங்கிற்கு அடிக்கல் நாட்டிப் பேசியது.
